மீண்டும் போர் பதற்றம்... அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்தியது ஈரான்!

 
ஈரான் ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான தொடர் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் ரகசியமாக நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முற்றிலுமாக நிறுத்துவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தின. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு அரபு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உருவானது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, லெபனான் மீதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. தற்போது அங்கு தற்காலிகச் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது.

அமெரிக்கா ஈரான்

இந்த மோதலின் உச்சகட்டமாக, சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு நடந்து வந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருந்த போதே, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவப் படைத்தளத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.

ஈரான் அணு

லெபனானில் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், அதுவரை அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த அதிரடி முடிவால் ஹர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் சூழல் நீடிப்பதோடு, மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.