போர் பதற்றம் உச்சம்... ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் ரஷ்யா: தெஹ்ரானுக்குப் பறந்தது அதிநவீன 'டூம்ஸ்டே' விமானம்!

 
ரஷ்யா ரஷ்யாவின் அதிநவீன டூம்ஸ்டே விமானம் ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வளைகுடாப் பகுதியில் ராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானுக்குத் தனது முழுமையான ராணுவப் பாதுகாப்பை வெளிப்படுத்தும் விதமாக ரஷ்யா களமிறங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டின் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தைத் தெஹ்ரானுக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் கடந்த சில நாட்களாகப் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர அண்மையில் எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முறிவடைந்துள்ளது.

மிக முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சர்வதேச கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களைத் நடத்தியதைத் தொடர்ந்து இந்த அமைதி ஒப்பந்தம் முற்றிலும் கைவிடப்பட்டது.

ஏவுகணை ஈரான் அமெரிக்கா தாக்குதல் போர்

தற்போது இரு நாடுகளும் தீவிர வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாகக் குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கொடூரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் தீவிரத் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் ஈரானுக்குப் பக்கபலமாக ரஷ்யா தற்போது நேரடியாகத் தார்மீக ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய விமானப்படையின் மிக உயர்மட்டப் பிரிவால் இயக்கப்படும் 'டுபோளெவ்-214 பி' என்ற அதிநவீன கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விமானம் தெஹ்ரான் வந்தடைந்துள்ளது.

உலக நாடுகளால் 'உலக அழிவு நாள்' விமானம் அல்லது 'நடமாடும் வான்வழி கட்டுப்பாட்டு மையம்' என்று வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் சிறப்பம்சமாக, கடுமையான போர்ச் சூழல் அல்லது தேசிய அவசரநிலையின் போது, நாட்டின் உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் தரையில் இருக்க முடியாமல் போனால், வான்வழியாகப் பறந்து கொண்டே ஒட்டுமொத்த நாட்டின் ராணுவச் செயல்பாடுகளையும், அணுஆயுதப் படைகளையும் இந்த விமானத்தில் இருந்து கொண்டே வழிநடத்த முடியும்.

ஈரான் ஏவுகணை ட்ரோன்

இந்த விமானத்தில் அதிநவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், ரகசிய உளவுத் தகவல் பரிமாற்றக் கருவிகள் மற்றும் எதிரி நாடுகளின் ரேடார்களை முடக்கும் மின்னணு போர்க்கால 'ஜாமிங்' எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் முழுமையாகப் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன விமானத்தின் வருகையானது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கூட்டணியை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது. இந்த விமானத்தின் மூலம் ரஷ்யா தங்களது இராணுவ உளவுச் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் உளவுத் தகவல்களை ஈரானுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகளை முறியடிப்பதற்கான மிக உயர்மட்ட கூட்டு ராணுவ ஆலோசனைகளைத் தெஹ்ரானில் மேற்கொள்வதற்கும், ஈரான் மீதான இந்தத் தாக்குதலில் மாஸ்கோவின் முழு ஆதரவு உண்டு என்பதைத் சர்வதேச அரங்கிற்குப் பறைசாற்றவும் ரஷ்யா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.