போர் பதற்றம்... அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கண்காணிப்பு வாகனத்தை கைப்பற்றியது ஈரானியப் படைகள்!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் சிறிய ரக ஆளில்லா நீர்மூழ்கிக் கண்காணிப்பு வாகனத்தை ஈரான் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன. இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு புதிய மோதல் போக்கையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் சுமார் 5.8 மீட்டர் நீளமும், 3,000 கிலோ எடையும் கொண்டது ஆகும்.

கடலுக்கு அடியில் எவ்வித மனித உதவியும் இன்றித் தொடர்ந்து 10 நாட்கள் வரை தடையின்றிப் பயணித்து உளவு பார்க்கும் அதிநவீனத் தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் இப்பகுதியில் கடல்சார் கண்காணிப்புப் பணிகளுக்காகவும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காவும் இதனைப் பயன்படுத்தி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில், ஈரானின் இந்த நடவடிக்கையால் இப்பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
