போர் பதற்றம்... 20,000 தொழிலாளர்கள் தவிப்பு... கோடிக்கணக்கில் தேங்கிய கடலை மிட்டாய்களால் கேள்விக்குறியான வாழ்வாதாரம்!

 
கடலை மிட்டாய் கடலை மிட்டாய்

விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டி கடலைமிட்டாய் தனது சுவைக்கும், தரத்திற்கும் உலகப்புகழ் பெற்றது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மேகங்களால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான மிட்டாய்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளன.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்த பிறகு, அதன் ஏற்றுமதி பலமடங்கு அதிகரித்தது. இங்கு உற்பத்தியாகும் மிட்டாய்களில் சுமார் 70% சவுதி அரேபியா, துபாய், கத்தார், குவைத் போன்ற நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அபுதாபி போர்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவும் மோதல் போக்கால், கடந்த 10 நாட்களாகக் கப்பல் போக்குவரத்து மற்றும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே அனுப்பத் தயாராக இருந்த பல டன் மிட்டாய்கள் கிடங்குகளில் முடங்கியுள்ளன. போர் சூழல் காரணமாகப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றன. பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாட்டால், மிட்டாய்களைப் பேக் செய்ய உதவும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் ஜார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

துறைமுகம் கப்பல் ஷேர் கடல்

ஏற்கனவே கடலைப் பருப்பின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், இந்த ஏற்றுமதி முடக்கம் "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்" இருப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவில்பட்டியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 20,000 தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். ஏற்றுமதி முடங்கியுள்ளதால், உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.