போர் பதற்றம்... ஈரானின் குஹெஸ்தாக் துறைமுகம் மீது அமெரிக்கா 2-வது நாளாகக் குண்டுமழை!
ஈரானுடனான இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஆயுதப் படைகள் ஈரான் மீது 2-வது நாளாகத் தங்களது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை அருகே அமைந்துள்ள ஈரானின் புகழ்பெற்ற குஹெஸ்தாக் துறைமுகத்தை இலக்கு வைத்து அமெரிக்கப் போர் விமானங்கள் இன்று பயங்கரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன.
அமெரிக்கா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல்களில், துறைமுகத்தில் இருந்த கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன. தாக்குதலின் வீரியத்தால் துறைமுக வளாகம் முழுவதும் கரும்புகையுடன் பிரம்மாண்டமாகத் தீப்பற்றி எரிந்து வருகிறது.
துறைமுகம் தீப்பற்றி எரியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் பயணிக்கும் பல்வேறு நாடுகளின் வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் அண்மையில் தொடர் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.
இதற்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கப்படும் எனப் பென்டகன் எச்சரித்திருந்த நிலையில், தற்பொழுது இந்தத் தீவிர வான்வழித் தாக்குதல் ஆபரேஷனை அமெரிக்க ராணுவம் கையில் எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சந்தையில் விலையேற்றம் ஏற்படும் என்ற கவலையும் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
