போர் பதற்றம்... ஈரான் துறைமுகங்களைச் சூழ்ந்த அமெரிக்கா - 10,000 வீரர்கள், 12 போர்க்கப்பல்கள் முகாமிப்பு!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு ஆயுதப் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அனைத்துத் துறைமுகங்களையும் அமெரிக்கக் கடற்படை அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த 'கடற்படை முற்றுகை' உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முற்றுகை நேற்று காலை 10 மணி முதல் அமலுக்கு வந்தது. சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் (கடற்படை, வான்படை மற்றும் மரைன் பிரிவினர்), 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் (யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் உட்பட) மற்றும் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஈரானின் கடல் எல்லைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நாட்டு வணிகக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இந்த முற்றுகை அமல்படுத்தப்பட்ட முதல் 24 மணிநேரத்தில் எந்தவொரு கப்பலும் அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையவில்லை. ஈரானியத் துறைமுகங்களில் இருந்து வெளியேற முயன்ற அல்லது உள்ளே நுழைய முயன்ற 6 வணிகக் கப்பல்கள் அமெரிக்கக் கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, மீண்டும் ஈரான் துறைமுகங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்குத் தற்போதைக்குத் தடை விதிக்கப்படவில்லை; ஆனால் ஈரான் சம்பந்தப்பட்ட போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நீடித்து வந்த 40 நாள் நேரடிப் போர், ஏப்ரல் 8-ல் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு வந்தது. ஆனால், ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் போர் இழப்பீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் தோல்வியடைந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா இந்த முற்றுகையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை 'போர் விதிமீறல்' என ஈரான் சாடியுள்ளது. "எங்கள் துறைமுகங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள மற்ற நாடுகளின் துறைமுகங்களும் பாதுகாப்பாக இருக்காது" என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
