கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விடுதி வார்டன் !
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அங்கு பணியாற்றும் விடுதி வார்டன் ஆபாசமான முறையில் குறுஞ்செய்திகளை (மெசேஜ்) அனுப்பி வந்துள்ளார். இந்த கொடூர செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி தாளாளர் மற்றும் அங்குள்ள பேராசிரியர்களிடம் மாணவிகள் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்லூரி நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட மாணவிகளை அவர்களின் சாதிப் பெயரைக் கூறி மிகக் கேவலமாக இழிவுபடுத்தி மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள் தங்களுக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர் தற்பொழுது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய காமுக வார்டன் மற்றும் மாணவிகளை சாதி ரீதியாக இழிவுபடுத்திய கல்லூரி தாளாளர் செல்வகுமார் உள்பட 6 பேர் மீது போலீசார் தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அனைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
