கரையோர மக்களுக்கு எச்சரிக்கை... கபினி அணையில் நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருதி வினாடிக்கு 30,000 கன அடி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கான நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. 2,284 அடி மொத்த உயரமும், 19.52 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட கபினி அணை வேகமாக நிரம்பித் தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
தொடக்கத்தில் வினாடிக்கு 10,000 மற்றும் 25,000 கன அடியாக இருந்த உபரிநீர் திறப்பு, தற்போது நீர்வரத்து 27,000 முதல் 30,000 கன அடியைத் தாண்டியதால் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுவதால், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மைசூரு மற்றும் சுற்றியுள்ள ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரானது தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுப் பகுதியை அடைந்து, அங்கிருந்து மேட்டூர் அணையை நோக்கி வந்தடையும். ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் தண்ணீர் இல்லாததால் வருத்தத்தில் இருந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கபினியில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அடைந்துள்ளனர்.
