கனவு கலைந்ததா? பாஜகவில் இருந்து சரத்குமார் விலகல்?! - சென்னையில் இன்று அவசர ஆலோசனை!
கடந்த 2024-ஆம் ஆண்டு தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த சரத்குமார், தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இணைந்த 2 ஆண்டுகள் ஆகியும் சரத்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன:
பாஜகவில் இணைந்தபோது வாக்குறுதி அளிக்கப்பட்டபடி தனக்கோ அல்லது தனது முக்கிய நிர்வாகிகளுக்கோ தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்பது சரத்குமாரின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்குக் குறிப்பிட்ட தொகுதிகளைச் சரத்குமார் கேட்டிருந்த நிலையில், பாஜக தலைமையிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள், "பாஜக நம்மைப் புறக்கணிக்கிறது, உடனடியாக வெளியேறுங்கள்" எனச் சரத்குமாருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை தியாகராயநகர், கீதம் ஹாலில், அகில இந்திய சரத்குமார் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள், சுப்ரீம் ஸ்டார் பேரவை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சமக நிர்வாகிகள் ஆகியோருடன், பாஜகவில் நீடிப்பதா அல்லது மீண்டும் தனிக்கட்சி (புதிய சமத்துவ மக்கள் கட்சி) தொடங்குவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, சரத்குமார் செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர் பாஜகவில் இருந்து விலகுவது குறித்தோ அல்லது 2026 தேர்தலுக்கான புதிய கூட்டணி குறித்தோ தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
