போதையில் யூ-டியூப் பார்த்து அறுவை சிகிச்சை... இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், போலி மருத்துவர் ஒருவர் மது போதையில் யூ-டியூப் காணொளிகளைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால், இளம் பெண் ஒருவரின் நரம்புகள் துண்டிக்கப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான போலி மருத்துவரைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனிஷ்ரா ராவத். இவருக்கு வயிற்றில் கடுமையான வலி இருந்துள்ளது. இதனையடுத்து, அவரது கணவர் தேஹ்பகதூர் ராவத், அப்பகுதியில் உள்ள கோத்தியில் இயங்கி வந்த ஒரு தனியார் கிளினிக்குக்கு முனிஷ்ராவை அழைத்துச் சென்றுள்ளார். அந்த கிளினிக்கை நடத்தி வந்தவர் கியான் பிரகாஷ் மிஸ்ரா. இவர் முனிஷ்ராவைச் சோதித்தபோது, அவருக்குச் சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே வலி சரியாகும் என்றும் கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்காக மொத்தமாக ரூ.25,000 செலவாகும் என அவர் தெரிவித்ததை நம்பிய தேஹ்பகதூர், கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி முன் பணமாக ரூ.20,000 கொடுத்துள்ளார்.

கியான் பிரகாஷ் மிஸ்ரா சட்டவிரோதமாக எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் கிளினிக் நடத்தி வந்த ஒரு போலி மருத்துவர் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. மேலும், சம்பவத்தன்று அவர் கடும் மது போதையில் இருந்துள்ளார். அறுவை சிகிச்சை முறைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில், அவர் யூ-டியூப் காணொளிகளைப் பார்த்தபடி முனிஷ்ராவிற்கு அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார். இந்தத் தவறான மற்றும் ஆபத்தான சிகிச்சையின்போது, ஆழமாக வெட்டியதில் முனிஷ்ராவின் உடலில் பல முக்கிய நரம்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதோடு, அவரது உடல் நிலையும் மிகவும் மோசமடைந்தது.
சிகிச்சை பெற்ற அடுத்த நாளே (டிசம்பர் 6) இளம் பெண் முனிஷ்ரா ராவத் பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அவரது உறவினர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். முனிஷ்ரா உயிரிழந்ததையடுத்து, அவரது கணவர் தேஹ்பகதூர் ராவத் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில், போலி டாக்டர் கியான் பிரகாஷ் சட்டவிரோதமாகக் கிளினிக் நடத்தியதாகவும், போதையில் யூ-டியூப் பார்த்து தவறாக அறுவை சிகிச்சை செய்ததாலேயே தன் மனைவி உயிரிழந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் கிளினிக்கில் ஆய்வு செய்ததில், அது அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமாக இயக்கப்பட்ட கிளினிக் என்பதும், சிகிச்சை அளித்தவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலி டாக்டர் கியான் பிரகாஷ், அவரது உறவினர் விஜய் குமார் மிஸ்ரா மற்றும் விவேக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள மூவரையும் தீவிரமாகத் தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
உயிரிழந்த முனிஷ்ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சரியான மருத்துவத் தகுதி இல்லாத ஒருவரால், மது போதையில் நடத்தப்பட்ட இந்தச் செயல், ஒட்டுமொத்த மருத்துவத் துறை மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
