தண்ணீர் பிடிப்பதில் தகராறு... இளைஞர் வெட்டிப் படுகொலை... பரபரப்பு!

 
சென்னை

 

சென்னை நொளம்பூர் பகுதியில் நேற்று இரவு டேங்கர் லாரியில் குடிநீர் பிடிப்பதில் அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் உதயா ஆகியோருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறி, சஞ்சய் மற்றும் அவரது சகோதரர் சரத் ஆகியோர் உதயாவைத் தாக்கினர். இதனால் கடும் ஆத்திரமடைந்த உதயா, சிறிது நேரம் கழித்துத் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய 8  பேர் கொண்ட கும்பலுடன் சஞ்சய்யின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து உடைத்துச் சூறையாடினார்.

ஆம்புலன்ஸ்

அங்கிருந்த சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரை அந்த ஆயுதக் கும்பல் சரமாரியாகக் கத்தியால் வெட்டியது. இதனைத் தடுக்க முயன்ற அவர்களின் தந்தை முருகதாஸுக்கும் பலத்த வெட்டு விழுந்தது. மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முருகதாஸுக்கு 38 தையல்களும், சரத்துக்கு 48 தையல்களும் போடப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நொளம்பூர் காவல் துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இன்று அதிகாலை மதுரவாயல் பகுதியில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளியான ரூபேஷ் என்பவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் காவலர்களை அரிவாளால் வெட்டித் தப்பிக்க முயன்றார். இதனால் காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக ரூபேஷின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். மேலும் அவருடன் இருந்த நவீன்குமார், உதயராஜ், சூர்யா உள்ளிட்ட மற்ற ஏழு பேரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.