வயநாடு 'முட்டிகொம்பன்' யானையைப் பிடிக்க வனத்துறை தீவிரம் - மயக்க மருந்து செலுத்தத் திட்டம்!

 
வயநாடு முட்டிகொம்பன் யானை வயநாடு முட்டிகொம்பன் யானை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் 'முட்டிகொம்பன்' என்று அழைக்கப்படும் காட்டு யானையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வந்த 'முட்டிகொம்பன்' யானை, தற்போது மனித உயிரிழப்புக்கும் காரணமாகியுள்ளதால் அதனைப் பிடிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வயநாடு மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, காபி மற்றும் மிளகுத் தோட்டங்களுக்குள் புகுந்து இந்த யானை தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது விளைநிலத்திற்குள் புகுந்த யானையை விரட்ட முயன்ற ராஜீவ் என்ற விவசாயி, யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை

விவசாயியின் மரணத்தைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினரைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, யானையைப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

கலூர்குன்னு பகுதியில் யானையை வழிமறித்த வனத்துறையினர், அதற்கு மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால், அடர்ந்த புதர்கள் மற்றும் சாதகமற்ற நிலப்பரப்பைப் பயன்படுத்தி யானை மீண்டும் காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டது.

யானை

தற்போது கர்நாடகா மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பயிற்சி பெற்ற வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை இருக்குமிடத்தைத் துல்லியமாகக் கண்டறிய ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

யானை மீண்டும் சமவெளிப் பகுதிக்கு வரும்போது அல்லது பாதுகாப்பான இடத்தில் தென்படும்போது, அதற்கு மயக்க மருந்து செலுத்தி, கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளது.