“ஆட்சியமைக்க திமுகவிடம் பேசவில்லை... விஜய்யிடம் ஆதரவு கேட்க திட்டமிட்டிருந்தோம்” - டிடிவி பேட்டி
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சமீபத்திய பேட்டியின் முக்கிய விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தற்போதைய ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கப் பேசியதாகத் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், அந்த வாதம் முற்றிலும் தவறானது என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அதிமுக ஆட்சியை அமைப்பதற்காகத் தற்போதைய முதலமைச்சர் விஜய்யிடம் ஆதரவு கேட்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த முயற்சி கைகூடாத காரணத்தினால் திருமாவளவனை முதலவராக்க அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாராபுரத்தில் சத்தியபாமாவை அழ வைத்ததைப் போல, மதுராந்தகம் வேட்பாளரையும் அழ வைப்பாரென குறிப்பிட்ட அவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் நடிப்பதற்குத் தயார் செய்து வருவதாகத் தெரிவித்தார். ரீல்ஸ் மூலம் ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் கடந்த நான்கு மாத கால ஆட்சியில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், தவெக ஆட்சியில் மின்வெட்டு மட்டுமே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்களைச் சீரமைத்துத் தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், அந்த உத்தரவு எந்த நிலையில் உள்ளது என்பதை எப்போதாவது ஆய்வு செய்துள்ளாரா அல்லது அதிகாரிகளிடம் விசாரித்துள்ளாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 630 அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கூறிய பொய், அடுத்த நாளின் நிலவரம் மூலமாகவே அம்பலமானது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
