“இனி எங்களுக்கு மகளே கிடையாது...” உயிருடனிருக்கும் மகளுக்கு பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை!

 
இறுதிசடங்கு காதல் பாடைக்கட்டி

பீகார் மாநிலத்தில் குடும்ப கௌரவத்திற்கு விரோதமாக வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்ட தன் மகளுடன் உறவைத் துண்டித்த தந்தை ஒருவர், உயிருடன் இருக்கும் மகளுக்குப் பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம், கேநகர் அருகே உள்ள சப்பாய் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி மனோஜ் கோஸ்வாமி. இவரது மூத்த மகள் ரியா குமாரி (20) பி.ஏ. முதலாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைத் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

மகளைக் காணவில்லை எனத் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட இருவரையும் போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ரியா தனது விருப்பத்தின் பேரிலேயே காதலனுடன் சென்றதாகவும் அவருடனேயே வாழ விரும்புவதாகவும் குடும்பத்தினருக்கு எதிராகத் தெரிவித்தார்.

குடும்பத்தின் கௌரவத்தைச் சீரழித்துவிட்டதாகக் கூறி மனமுடைந்த தந்தை மனோஜ் கோஸ்வாமி, மகளுடனான உறவை முற்றிலும் துண்டிப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தனது மகளின் உருவப்பொம்மையில் புகைப்படத்தை ஒட்டி, இந்து பாரம்பரிய முறைப்படி பாடை அலங்கரிக்கப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

உயிருடன் இருக்கும் தனது மகளுக்கு அனைத்து இறுதிச்சடங்குகளையும், முறைப்படி காரியச் சடங்குகளையும் செய்யப் போவதாகத் தந்தை தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.