"மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை!" - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு!

 
டி.கே.சிவக்குமார் டி.கே.சிவக்குமார்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், "மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கேரளா அல்லது தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை" என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், இத்திட்டத்திற்கான இறுதி அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை விளக்கினார். "மேகதாது அணை கட்டுவது தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசும், மத்திய நீர் வள ஆணையமும் மட்டுமே ஆகும். இதில் அண்டை மாநிலங்களின் ஒப்புதல் என்பது கட்டாயமில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை உறுதியாக கட்டப்படும்! மீண்டும் சலசலக்கும் அரசியல் வட்டாரம்!

மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தங்களது அரசியல் லாபங்களுக்காக மட்டுமே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன" என்று தமிழக அரசியல் கட்சிகள் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையாது என்று கர்நாடகத் தரப்பு தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

மேகதாது

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரியக் காவிரி நதிநீரைத் தடையின்றி வழங்குவதற்கு கர்நாடக அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. மேகதாது அணை என்பது குடிநீர் தேவைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் மட்டுமே கட்டப்படவுள்ளதால், இதனால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் டி.கே.சிவக்குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.