சிறுநீரைக் குடித்து உயிர் பிழைத்தோம்... கடலில் 6 நாட்களாக தத்தளித்த மீனவகள் கண்ணீர் பேட்டி!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், மனோகர் மற்றும் நாகவேல் ஆகிய 3 மீனவர்கள் கடந்த 3-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகில் திடீரென ஏற்பட்ட இயந்திரப் பழுது காரணமாக, நடுக்கடலில் திசைமாறி கரை திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளனர். பல மணி நேரம் ஆகியும் அவர்கள் வராததால் குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கடலோர காவல்படையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தாழங்குடா கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களையும் அந்த வழியாக வந்த சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
கடந்த 6 நாட்களாக நடுக்கடலில் உணவும் குடிநீரும் இன்றி தவித்ததால், அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தங்களுக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள் கண்ணீர் மல்கப் பேசியுள்ளனர். கடலில் பசி மற்றும் தாகத்தால் உயிருக்குத் போராடிய போது, வேறு வழியின்றி கடல் நீரையும் தங்களது சொந்த சிறுநீரையும் குடித்து உயிர் வாழ்ந்ததாக கூறினர். இந்தச் சம்பவம் கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
