‘பரந்தூர் விமான நிலையம் இடம் மாறுதல் தவெக அரசிடமிருந்து குறித்து எந்த கோரிக்கையும் வரவில்லை’ - மத்திய இணையமைச்சர் முரளிதர மொஹோல் தகவல்!
சென்னையின் 2-வது பன்னாட்டு விமான நிலையத்தைப் பரந்தூரில் அமைப்பதற்குப் பதிலாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடமிருந்து இதுவரை எந்தக் கோரிக்கையும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்று ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர மொஹோல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தபோது அமைச்சர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். பரந்தூர் திட்ட இடத்தை மாற்றுவது குறித்துத் தமிழ்நாடு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எந்தப் புதிய விண்ணப்பமோ அல்லது முன்மொழிவோ வரவில்லை. பரந்தூரில் 'கிரீன்ஃபீல்ட்' பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

செப்டம்பர் 2024-ல் பெறப்பட்ட விண்ணப்பத்தின்படி, இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ.10,500 கோடி ஆகும். திமுக ஆட்சிக் காலத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காகத் தொடக்கப்பட்ட நில எடுப்புப் பணிகளைத் தவெக அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்களின் தொடர் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பரந்தூர் திட்டத்தை முன்னெடுக்காமல் மாற்று இடங்களை ஆராயும் நிலைப் பாட்டிலையே மாநில அரசு உள்ளதாகக் கூறப்படும் சூழலில், மத்திய அரசிடம் முறையான அரசாணை அல்லது கோரிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
