"பாலியல் தொல்லைகளுக்கு ஆளானோம்..." கேரளத்தை அதிர வைத்த நடிகைகள்!
நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களுக்காக நாடு முழுவதும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த மலையாள திரையுலகம், தற்போது ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகளுக்காக பரபரப்பாகி இருக்கிறது. 223 பக்கங்களைக் கொண்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருவதாக பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பல வருடங்களாக மனசுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த நடிகைகள் பலரும் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து பேசி வருகின்றனர்.
மலையாள திரையுலகில் மட்டுமே பாலியல் சீண்டல்கள் இருப்பதாக பேசி வரும் நிலையில், முதல் ஆளாக தெலுங்கு திரையுலகில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்று நடிகை சமந்தா குரல் உயர்த்தி இருக்கிறார்.
‘இது எல்லா மொழி திரைத்துறையிலும் இருக்கு.. முன்னணி நடிகர்கள் இது குறித்து குரல் கொடுக்க வேண்டும். பகீரங்கமாக புகார் தெரிவித்த சின்மயிக்கு ஏன் யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் வாய்ப்புகளை இழந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்’ என்று ஆவேசமாக பேசி தமிழில் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் நடிகை ராதிகா.
பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என்று அனைத்து திரையுலகிலும் நடிகைகளின் "அட்ஜஸ்ட்மென்ட்" விஷயம் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது என்பது தான் பரவலான கருத்து. ஆனால் கேரள திரையுலகில், நடிக்க வரும் பெண்களிடம், வாய்ப்புக்கு இணையான பாலியல் சேவைகளை வழங்க வற்புறுத்தும் விஷயம் அதிகளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கேரளத்தில் பூனைக்கு மணி கட்ட முதன்முதலில் களத்தில் இறங்கியவர் நடிகை ரேவதி சம்பத். இன்றளவிலும் தனது கதாபாத்திரங்களுக்காகவும், தேர்ந்த நடிப்பிற்காகவும் ரசிகர்களிடையே கொண்டாடப்படுபவர் ரேவதி சம்பத். "கடந்த 2016ல் பிரபல நடிகரும், மலையாள நடிகர் நடிகர் சங்க பொதுச் செயலாளருமான சித்திக், தன்னை ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் ரேவதி புகார் தெரிவித்திருந்தார். அதே போன்று நடிகர் ரியாஸ் கான் தன்னிடம் அத்துமீறியதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.
தமிழில் இப்படி புகார் தெரிவித்தால் அந்த நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, சினிமாவில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுவிடுவார். ஆனால், இவருக்கு துணையாக களத்தில் இறங்கினார் மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீலேகா மித்ரா. கேரள நடிகை இல்லையெனினும், தொடர்ச்சியாக பல மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீலேகா, பிரபல இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். கேரள சினிமா அகாடமியின் தலைவராக பதவி வகித்து வந்த அவர், ஒரு படப்பிடிப்பின்போது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் கூறியுள்ளார்.
அடுத்த அதிர்ச்சியாக நடிகை சோனியா மல்ஹார், கடந்த 2013ல் தொடுபுழாவில் பிரபல நடிகர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், அவர் தொல்லை தாங்காமல் தான் அழுததைக் கண்டு தன்னை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகைகள் கீதா விஜயன், ஸ்ரீதேவிகா ஆகிய இருவரும் இயக்குநர் துளசிதாஸ் மீது புகார் கொடுத்து அதிர்ச்சியளித்தனர்.
நடிகை மீனு முனீர் கேரளாவின் உச்ச நடிகர்களான ஜெயசூர்யா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு ஆகிய நான்கு பேர் மீதும் புகாரளித்துள்ளது கேரளாவை அதிர செய்தது. இவர்கள் நான்கு பேருமே தனக்கு பல முறை தொல்லைத் தந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக 18 நடிகர்கள், இயக்குனர்கள் மீது மலையாள திரையுலக நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இன்னும் புகார் பட்டியல் நீண்டுக் கொண்டிருப்பது மலையாள திரையுலகில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழில் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் விஷால், இது குறித்து தமிழ் சினிமாவில் இருந்து தனக்கு எந்த புகாரும் வரவில்லை என்று புத்திசாலித்தனமாக பதிலளித்திருக்கிறார். நடிகர் ஜீவா இன்னும் ஒருபடி மேலே போய், தமிழ் சினிமாவில் அப்படியான பாலியல் தொல்லைகள் கிடையாது. அதெல்லாம் மலையாளத்தில் மட்டும் தான் என்று கூறியிருக்கிறார்.
அனைத்து மொழி திரையுலகிலும் நண்பர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனதுபட புரோமோஷன் குறித்து சிரித்தப்படியே திருவாய் மலர்பவர், நோ கமெண்ட்ஸ்.. அது குறித்து எனக்கு தெரியாது” என்று கூறி அதிர வைத்திருக்கிறார். இவர்கள் இத்தனை வருடங்களாக வைரமுத்து மீதான சின்மயி புகாருக்கே கருத்து சொல்லாதவர்கள். இத்தனைக்கும் சின்மயி மட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட பாடகிகள் வைரமுத்து மீது புகார் தெரிவித்திருந்தனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா