பெண் குழந்தைகளுக்குச் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவோம் - முதல்வர் விஜய் நெகிழ்ச்சி ட்வீட்!
சர்வதேச பெண் குழந்தை நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் பெண் குழந்தைகள் அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துகளையும், நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியையும் சமூக வலைத்தளம் வாயிலாகப் பகிர்ந்துள்ளார்.
பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என்றும், அவர்களின் மழலைச் சிரிப்பு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் இயற்கையின் பேரழகையும் குறிப்பதாக முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே அங்கு அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை மற்றும் முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது ஒட்டுமொத்தக் கடமையும் பொறுப்புமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான ஒரு சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
