“தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்” - காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. இருப்பினும், ஆளுநர் தொடர்ந்து தாமதம் செய்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தவெக-விற்கு அதிக இடங்களை வழங்கியுள்ளனர். தனிப்பெரும் கட்சி என்ற முறையிலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதம் உள்ள நிலையிலும் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை."

"மக்களின் தெளிவான தீர்ப்பை மதிக்காமல், ஆளுநர் அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து காலம் கடத்தினால், தமிழகம் தழுவிய அளவில் மாணவர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதன் ஒரு பகுதியாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டத்தை நடத்துவோம்."
ஏற்கனவே தவெக தொண்டர்கள் மெரினாவில் கூடத் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது காங்கிரஸின் இந்த அறிவிப்பு காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் தற்போது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்க்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், தற்போது தரைத்தளத்திலும் தவெக-விற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இது தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான புதிய அரசியல் பிணைப்பை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
