"வெளியே வேஷம் போட்டுக்கொண்டு பம்மிக்கொண்டிருக்க மாட்டோம்; திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான்": தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துத் தாராபுரம் அருகே உள்ள சித்ராவுத்தன்பாளையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
எம்மதமும் சம்மதம் என்பதைத் தாண்டி, "எம்மதமும் நம் மதம்" என்ற உறுதியான நம்பிக்கையுடேவே தாங்கள் அரசியலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். கிறிஸ்துமஸ், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் பக்ரீத் உள்ளிட்ட அனைத்துப் பண்டிகைகளுக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

2026 தேர்தலில் திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியதைச் சிலர் இன்னும் மறந்துவிட்டு அதிகாரத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று சாடிய அவர், மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், தனக்கு மன்னராட்சி மனப்பான்மை எப்போதுமே இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
கொளத்தூர் மக்கள் தன்னைத் தோற்கடித்ததாக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியின் தொடர் தவறுகளின் காரணமாகவே கொளத்தூர் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றார். மேலும், "வெளியே வேஷம் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் பம்மிக்கொண்டிருக்க மாட்டோம்; மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம் என்று இந்த இடைத்தேர்தலுக்குப் பின் ஒரு அறிக்கை வரும், பாருங்கள்" என்று விமர்சித்தார்.

அண்ணாவை மறந்து, அவர் ஆரம்பித்த கட்சியை மறந்து, இன்று திமுகவோடு கூட்டு சேர்ந்து சுற்றுவோர் தாங்கள் கிடையாது என்று கூறிய அவர், சாதாரண எளிய மக்களைத் தேர்தலில் போட்டியிட வைத்து, துணிச்சலுடன் குறுநில மன்னர்களைத் தவெக தோற்கடித்து வருவதாகவும், கொள்கை ரீதியில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்றும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
