"கரூர் கணக்கை முடிக்காமல் விட மாட்டோம்"- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

 
ஆதவ் அர்ஜுனா

மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நிகழ்வில் பேசிய அக்கட்சியின் முக்கிய முகமும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, கரூரில் கடந்த சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டித் திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் நடைபெற்ற அரசியல் மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளைப் பட்டியலிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.  "நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்காகவும், அவரது சுயநலப் போக்குகளுக்காகவும் கரூரில் அன்றைய ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தக் காவல்துறையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. காவல்துறையை ஏவி எங்கள் மக்களைக் கொன்று குவித்தார்கள்."

கரூர்

"கரூரில் தவெக மற்றும் பிற எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பல்வேறு சூழ்ச்சிகளைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள். அங்கு அரங்கேறிய அத்தனை அராஜகங்களையும், சதிகளையும் நேரில் பார்த்த நேரடி சாட்சி அண்மையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார்." தவெக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கத் திமுக முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் கரூர் விவகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"கரூர் என்பது சாதாரண ஊர் அல்ல, அது எனக்கு மிகவும் முக்கியமான மண். அங்கு எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான கணக்கை நாங்கள் இன்னும் முடிக்கவில்லை; அதை முடிக்காமல் விடவும் மாட்டோம். அந்தச் சம்பவங்கள் குறித்துச் சட்டம் தன் கடமையை மிக விரைவில் துல்லியமாகச் செய்யும். கரூரில் அவர்கள் செய்த கொடூரங்களை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்புவதற்காகவே,  தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் பேசியதாகப் புதிய நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். ஆனால், எந்தச் சூழ்ச்சியிலும் உண்மையை மறைக்க முடியாது, விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்."

கரூர் விஜய்

அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணையும் அதே மேடையில், கரூரில் நடைபெற்ற பழைய வன்முறைகளைக் கையில் எடுத்துத் திமுகவின் முன்னணித் தலைவர்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடியாகத் தாக்கியிருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பகையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.