"பழி தீர்க்காமல் விடமாட்டோம்!" - ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கர்ஜனை - உலக நாடுகளுக்குப் பகீர் எச்சரிக்கை!
"ஈரான் போரை விரும்பவில்லை; ஆனால் தனது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என அவர் கூறியிருப்பது, தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றத்தை எகிற வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் தனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மொஜ்தபா கமேனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவேசமாகப் பேசியுள்ளார்: "எனது தந்தை மற்றும் பிற தியாகிகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களை ஈரான் ஒருபோதும் தப்பிக்க விடாது. அவர்களைத் தண்டிப்பதே எங்களது முதல் இலக்கு."

"இந்தப் போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்திற்கும், உயிர்ச்சேதத்திற்கும் ஈரானுக்கு ரத்தப்பணம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்குப் பன்னாட்டுச் சட்டப்படி மறுவாழ்வு நஷ்டஈட்டை நாங்கள் நிச்சயமாகக் கோருவோம்."
உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை குறித்து அவர் கூறுகையில், "அந்த ஜலசந்தியின் நிர்வாகத்தில் ஈரான் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. இனி ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதை ஈரான் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கும்" எனத் தெரிவித்தார். ஏற்கனவே அங்கு கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய போர் நிறுத்தம் குறித்துப் பேசிய அவர், "இது போரின் முடிவு அல்ல; ஒரு சிறிய இடைவெளி மட்டுமே. அனைத்து ராணுவப் பிரிவுகளும் தற்காலிகமாகத் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால், எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன. எதிரி தரப்பிலிருந்து மிகச்சிறிய தவறு நடந்தாலும், அது முழுப் பலத்துடன் முறியடிக்கப்படும்" என அதிர்ச்சியளித்தார்.
இந்தப் போரில் ஈரான் திட்டவட்டமாக வெற்றியாளராகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட மொஜ்தபா கமேனி, தற்காலிகச் சண்டை நிறுத்தத்தை வைத்துத் தங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என எச்சரித்தார். 40 நாள் போருக்குப் பிறகு ஒரு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஈரானின் இந்தத் 'தீப்பொறி' அறிக்கை உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
