“மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” - NCERT 8ம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை!
என்.சி.இ.ஆர்.டி (NCERT) வெளியிட்டுள்ள 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், இந்திய நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், பாடதிட்டத்திற்கு தடைவிதித்து இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த பாடம், நீதித்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, "நீதித்துறை ஊழல் நிறைந்தது என மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தால் சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்? இது திட்டமிட்டச் செயல் போலத் தெரிகிறது" என கடும் கண்டனம் தெரிவித்தது. சர்ச்சைக்குரிய அந்தப் பாடம் இடம்பெற்றுள்ள 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் உடனடித் தடை விதித்தது.

சந்தையில் புழக்கத்தில் இருக்கும் அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும், சமூக வலைதளங்களில் உள்ள அதன் டிஜிட்டல் வடிவங்களையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி தரப்பில் "இது எதிர்பாராமல் நடந்த தவறு" என மன்னிப்புக் கோரப்பட்டது. ஆனால், "வெறும் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது; இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தலைமை நீதிபதி உறுதிபடத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, வரும் 2026-27 கல்வி ஆண்டிற்குள் புதிய பாடத்திட்டம் வழங்கப்படும் என என்.சி.இ.ஆர்.டி உறுதியளித்துள்ளது. இருப்பினும், கவுன்சில் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
