"உழைப்பால் உயர்வோம்"... எடப்பாடி பழனிசாமி தொழிலாளர் தின வாழ்த்து!
உழைப்பின் மேன்மையைப் போற்றும் சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (மே 1), தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைகளை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக 'மே தினத்தை' அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி; உருக்கு போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி" என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து, தொழிலாளர்களின் தன்னம்பிக்கையை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக வகுத்த முத்தான திட்டங்களையும், அவர்களைத் தொடர்ந்து தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
"உழைப்பால் மட்டுமே உடல் வலிமையும் மனநிறைவும் கிடைக்கும்; நம்பிக்கையுடன் உழைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்" என்று உழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
