"உசுரே போனாலும் விடமாட்டோம்!" - பெட்ரோல் கேன்களுடன் பொதுமக்கள் தற்கொலை போராட்டம்!

 
பெட்ரோல்

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வரும் தனியார் கல்குவாரியால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பொதுமக்கள் இன்று அதிரடிப் போராட்டத்தில் இறங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கீரனூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் தரப்பில் புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களின் செல்போன்களைப் பிடுங்கி வைத்துவிட்டு, குவாரிக்கு எதிராகச் செயல்பட்டால் கைது செய்யப்படுவீர்கள் எனப் போலீசார் மிரட்டியதாகப் போராட்டக்காரர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை

காவல்துறையின் மிரட்டலால் ஆத்திரமடைந்த குளவாய்ப்பட்டி கிராம மக்கள், இன்று காலை ஏற்கனவே இயங்கி வரும் கல்குவாரிக்குள் அதிரடியாகப் புகுந்தனர். தங்களது கைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கேன்களை வைத்திருந்த அவர்கள், குவாரிக்குள் அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளம் மற்றும் வாரியை ஆக்கிரமித்து 200 அடி ஆழத்திற்குச் சட்டவிரோதமாகக் கற்களை வெட்டி எடுத்த குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய குவாரி அமைப்பதற்கான அரசாணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாகவும், தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளவும் தயங்க மாட்டோம் என்றும் பொதுமக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

விவசாயத்தையும் கூலி வேலையையும் நம்பி வாழும் எளிய மக்களின் இந்தப் போராட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி அந்த இடத்தில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.