மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்.. பெண்கள் நூதன வழிபாடு!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி அப்பகுதி கிராமப் பெண்கள் இரண்டு தவளைகளுக்குக் கோலாகலமாகத் திருமணம் செய்து வைத்து நூதன வழிபாடு நடத்தியுள்ளனர்.
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாகப் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குச் சென்றதால் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கி, விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

நிலவும் கடும் நீர் பற்றாக்குறையால் அப்பகுதிப் பெண்கள் குடிநீருக்காகத் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது. மக்களும் கால்நடைகளும் குடிநீரின்றித் தவித்து வருகின்றனர். வறட்சி நீங்கி ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக, அப்பகுதிப் பெண்கள் ஒன்றுதிரண்டு பாரம்பரியச் சடங்குகளுடன் இந்த நூதன வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர்.
குளத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட இரண்டு தவளைகளுக்கு மாலையிட்டு, மேளதாளங்கள் முழங்கத் திருமணச் சடங்குகளை நடத்தினர். தொடர்ந்து மழை பெய்ய வேண்டி சிறப்புப் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. வறட்சிக் காலங்களில் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழைக்கடவுள் குளிர்ந்து நல்ல மழை பொழிவார் என்பது தங்களது முன்னோர்களின் நம்பிக்கை என்றும், குடிநீர் பிரச்சனை தீரவே இந்த வழிபாட்டை நடத்தியதாகவும் கிராமப் பெண்கள் தெரிவித்தனர்.
