மதுபோதையில் வந்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

 
wedding

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஸ்கான் பிரதான் (வயது 22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாந்த் ராம் (வயது 24) என்ற இளைஞருக்கும் கடந்த 23 ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண நாளன்று மணமகன் வீட்டார் மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு மணப்பெண் வீட்டிற்கு வந்தனர். அப்போது மணமகன் சாந்த் ராம் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரால் சரியாக நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார்.

இதைப் பார்த்த மணப்பெண் முஸ்கான் மிகுந்த சினமடைந்து தனது கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி வீசி இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். மணமகனின் குடிப்பழக்கத்தை நிறுத்திக் கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை மணமேடையிலேயே அவர் மீறியதால் இந்த முடிவை எடுத்ததாகப் பெண் வீட்டார் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதால் தகவல் அறிந்து வந்த காவலர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மணப்பெண்ணின் விருப்பமில்லாமல் திருமணத்தை நடத்த முடியாது என்று கூறி மணமகன் வீட்டாரைக் காவலர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் திருமண ஏற்பாட்டுச் செலவுகளுக்காகப் பெண் வீட்டாருக்கு ரூபாய் 3 லட்சத்தை வழங்க மணமகன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். மணமேடைக்குக் குடித்துவிட்டு வந்த மாப்பிள்ளையை நிராகரித்த இளம் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் பாண்டே அவரை நேரில் அழைத்து வாழ்த்தினார்.