வார இறுதி, சுதந்திர தினத் தொடர் விடுமுறை.. தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களை (ஆகஸ்ட் 14, 15, 16) முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் சென்று வரத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 505 பேருந்துகளும், ஆகஸ்ட் 15-ம் தேதி (சனிக்கிழமை) 570 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களிலும் நாள்தோறும் தலா 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாள்தோறும் தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பல்வேறு ஊர்களிலிருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெள்ளிக்கிழமை அன்று 21,000-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 18,000-க்கும் மேற்பட்ட பயணிகளும் பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளனர்.

கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தொலைதூரம் செல்லும் பொதுமக்கள் www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது TNSTC செயலி மூலம் தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
