1,405 டன் எடை, 100 மீட்டர் நீளம்... திருச்சியில் தயாரான ராட்சத இரும்பு பாலம் 1,300 கி.மீ. கொண்டு செல்லப்பட்டு மும்பையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டது!
மும்பை - அகமதாபாத் இடையேயான இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்திற்காக, தமிழ்நாட்டின் திருச்சியில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட இரும்புப் பாலம் மும்பை அருகே வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள திவா-அஞ்சூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1,405 டன்களும், நீளம் 100 மீட்டரும், உயரம் மற்றும் அகலம் முறையே 14 மீட்டரும் ஆகும்.
மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் பாததிக்காக மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 28 இரும்பு பாலங்களில் இது 16-வது பாலமாகும். ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் 15 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நிறுவப்படும் முதல் இரும்புப் பாலம் இதுவாகும் எனத் தேசிய அதிவேக ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பட்டறையில் இப்பாலத்தின் பாகங்கள் தயாரிக்கப்பட்டன. அங்கிருந்து கனரக டிரெய்லர் வாகனங்கள் மூலம் சுமார் 1,300 கிலோமீட்டர் தூரம் சாலை வழியாகக் கொண்டு செல்லப்பட்டு தற்போது திறம்பட நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
