எடை குறைப்பு, சரும பளபளப்பு.. ஆப்பிள் சீடர் வினிகரில் இத்தனை மருத்துவக் குணங்களா?!
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது உடல் நலனுக்கும் சமையல் தேவைகளுக்கும் பல்வேறு வகைகளில் பயன்படும் ஒரு இயற்கைப் பொருளாக விளங்கி வருகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைச் சேர்த்து ஃபெர்மெண்ட் செய்யப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. ஆப்பிளைப் பிழிந்து அதன் சாற்றில் சில குறிப்பிட்ட பொருட்களைச் சேர்த்து இந்த வினிகர் தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக சாலட்கள் மற்றும் சட்னி வகைகளில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.

பொதுவில் வினிகர் தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அருந்தும் போது இருமல் வெகுவாகக் கட்டுப்படும் என்று இயற்கை மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதிகப்படியான உணவிற்கு முன்பு அருந்துவது வழக்கம். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட உப்பிசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.
நெஞ்செரிச்சல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் மற்றும் அரை கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிப்பது நல்ல பலனைத் தரும் எனக் கூறப்படுகின்றது.

கால்களைச் சுத்தம் செய்யும் போது பூஞ்சை பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க, வெதுவெதுப்பான நீரில் அரை கப் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து கால்களை சுமார் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு கால்களை நன்கு கழுவி விடலாம்.
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவது சைனஸ் தொந்தரவுகளுக்குச் சிறந்ததொரு இயற்கை வைத்தியமாகவும் கைமருந்தாகவும் விளங்குகிறது.
