இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்... தவெகவை ஆதரிப்பது குறித்து 3 கட்சிகள் இன்று முடிவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற இடங்களை எட்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு அவருக்கு மிக அவசியமாகிறது.
ஆட்சி அமைக்கத் தேவையான 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற, தவெக தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆதரவு கோரியுள்ளார். மேலும், தவெக நிர்வாகிகள் சிபிஎம் மற்றும் சிபிஐ தலைவர்களை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கியுள்ளனர்.

தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய மூன்று கட்சிகளும் இன்று தங்களது மாநிலக் குழு கூட்டத்தைக் கூட்டி இறுதி முடிவை அறிவிக்க உள்ளன. இந்தக் கட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே விஜய்யால் சுலபமாகப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தவெக-விற்கு ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், 113 என்ற எண்ணிக்கையில் தவெக கூட்டணி உள்ளது. இன்னும் 5 இடங்கள் கிடைத்தால் விஜய் முதல்வராகப் பதவியேற்பதில் உள்ள சிக்கல் நீங்கும்.

ஒருபுறம் மற்ற கட்சிகளின் முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், இன்று காலை 9 மணிக்குச் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் ஆளுநரைச் சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
நீண்டகாலமாக திமுக கூட்டணியில் இருந்த இந்தக் கட்சிகள், இப்போது விஜய்யின் புதிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமா அல்லது நடுநிலை வகிக்குமா என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
