9-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்… மகனுக்கு ரூ.1.62 கோடி பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த தந்தை!

 
பிஎம்டபிள்யூ

 

மேற்கு வங்காளத்தில் 9-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மகனுக்கு, தந்தை ரூ.1.62 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மேற்கு வங்காளத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டம், கால்சி பகுதியிலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது தல்ஹா (15). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், தனக்குப் பிடித்த பிஎம்டபிள்யூ காரை வாங்கித் தருவதாக அவரது தந்தையும் தொழிலதிபருமான ஷம்சுதீன் மித்யா ஏற்கெனவே உறுதியளித்திருந்தார்.

அதன்படி, மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள ஷோரூமில் இருந்து ரூ.1.62 கோடி மதிப்புள்ள BMW M4 Competition காரை வாங்கியுள்ளார். பின்னர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்டெய்னர் மூலம் அந்தக் கார் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனால், 15 வயதே ஆன தல்ஹாவுக்கு இன்னும் ஓட்டுநர் உரிமம் கிடையாது. எனவே, உரிமம் பெறும் வரை காரை ஓட்ட அனுமதிக்க மாட்டேன் என்றும், தற்போது மகன் பயணியாக மட்டுமே செல்ல முடியும் என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.இந்த விலையுயர்ந்த பரிசுக்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், இளம் வயதில் இத்தகைய சொகுசு கார் பரிசளிப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமும் எழுந்துள்ளது.