கெத்து ... வீட்டு வேலை செய்த பெண் எம்.எல்.ஏ ஆகி சாதனை... மேற்கு வங்கத்தில் அசத்தல்!
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒரு சாதாரணப் பெண்மணியின் கதை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆஸ்கிராம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட காளிதா மஜ்ஜி என்ற பெண்மணி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 12,000 வாக்குகள் அதிகம் பெற்றுத் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காளிதா மஜ்ஜி, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை இரண்டு வீடுகளில் பணிப்பெண்ணாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். மாதம் வெறும் 4,500 ரூபாய் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி வந்த அவர், அதிகாலை 5 மணிக்கே எழுந்து தனது பணிகளைத் தொடங்கி விடுவார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இவருக்கு, பாஜக மீண்டும் வாய்ப்பளித்தது. இந்த முறை மக்கள் அவருக்குப் பேராதரவை வழங்கிச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றபோதும், அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அவர் வேலைக்கு வராத நாட்களிலும் அவருக்கான சம்பளத்தை வழங்கி அவரை ஊக்குவித்துள்ளனர். பாரம்பரிய அரசியல் குடும்பங்களைச் சாராத, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண்மணி மக்கள் பிரதிநிதியாகத் தேர்வாகியிருப்பது மேற்கு வங்க அரசியலில் ஒரு புதிய விடியலாகப் பார்க்கப்படுகிறது. இவருடைய இந்த அசுர வளர்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் பலருக்கும் உந்துதலாக மாறியுள்ளது.
