மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி... புதிய சட்டசபை அமைக்கத் தேர்தல் ஆணையம் ஆணை!

 
தேர்தல் தேர்தல்

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில், முறைகேடு காரணமாக ஒரு தொகுதி தவிர்த்து மீதமுள்ள 293 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 207 இடங்களை அள்ளிய பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸின் நீண்டகால ஆட்சியை வீழ்த்தி முதன்முறையாக வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை உள்ளடக்கிய முறைப்படியான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் புதிய சட்டசபை அமைப்பதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. பெரும்பான்மை பலம் கொண்டுள்ள பாஜக-வுக்குப் புதிய அரசு அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழா குறித்த அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.