தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை...2 பேர் பலி, மேற்கு வங்கத்தில் 433 பேர் அதிரடி கைது!

 
மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம்

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4-ம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய இந்த மோதல்களில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக 433 பேரை அம்மாநில காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,100 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் (DGP) சித்தநாத் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பதற்றமான பகுதிகளில் 500 கம்பெனி மத்தியப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வெற்றி ஊர்வலங்களின் போது புல்டோசர்களைப் பயன்படுத்தக் கூடாது எனப் போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ரத், நேற்று இரவு (மே 6) வட 24 பர்கானா மாவட்டத்தின் மத்தியம்கிராம் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குத் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை நிலைநாட்டவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.