ஜிம்பாப்வே அணியைச் சிதறடித்த வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக்கோப்பையில் சாதனை வெற்றி!
டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்கத்தில் பிராண்டன் கிங் (9), ஷாய் ஹோப் (14) ஆகியோர் ஏமாற்றினாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் ரோவ்மேன் பவல் ஜோடி ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஹெட்மயர் வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவரின் அதிவேக அரைசதம் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 34 பந்துகளில் 85 ரன்கள் (7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) குவித்தார். அவருக்கு உறுதுணையாகப் பவல் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் மற்ற வீரர்களும் அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, வெஸ்ட் இண்டீஸின் சுழற்பந்து வீச்சில் சிக்கித் திணறியது. அந்த அணியின் சிக்கந்தர் ராசா (27) மற்றும் பிராட் எவன்ஸ் (43) ஆகியோர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 17.4 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்த 107 ரன்கள் வித்தியாசத்திலான பிரம்மாண்ட வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி +5.350 என்ற மிகச்சிறந்த நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பைப் பெறுவதில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
