அட... திமிங்கலத்தின் புரதம் மூலம் மனிதன் 200 ஆண்டுகள் வாழலாம் ... ஆச்சர்யம் தரும் ஆய்வறிக்கை!
ரோசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். கடலில் வாழும் போஹெட் திமிங்கலங்கள் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழ்வதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அவற்றின் உடலில் சி.ஐ.ஆர்.பி.பி எனப்படும் புரதம் 100 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சிறப்புப் புரதம் செல்களில் ஏற்படும் டிஎன்ஏ பாதிப்புகளை மிக விரைவாகச் சரிசெய்து நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்த அதிசயப் புரதத்தை மனித செல்களில் செலுத்திச் சோதனை செய்தபோது, அவை வியக்கத்தக்க வகையில் மனித டிஎன்ஏ-வைச் சீரமைப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஆர்க்டிக் போன்ற உறைபனிப் பகுதிகளில் திமிங்கலங்கள் வாழ்வதால், அந்த அதிகப்படியான குளிர் அவற்றின் உடலில் இந்தப் புரத உற்பத்தியை இயற்கையாகவே அதிகரிக்கிறது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். ஆய்வகத்தில் பழ ஈக்களின் உடலில் இந்தப் புரதத்தைச் சேர்த்தபோது, அவற்றின் ஆயுட்காலம் கணிசமாக உயர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களும் முதுமையைத் தள்ளிப்போட்டு நீண்ட காலம் நோயின்றி வாழ்வதற்கான புதிய கதவு திறக்கப்பட்டுள்ளதாக 'நேச்சர்' அறிவியல் இதழ் தெரிவித்துள்ளது.

குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் கூட மனித உடலில் இந்தப் புரதத்தின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருப்பினும் இது தொடர்பான முழுமையான முடிவுகளை அடைய இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட புரதத்தின் மூலம் முதுமையைத் தடுக்க முடியும் என்ற இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 200 ஆண்டுகள் வரை மனிதன் வாழ்வது இப்போதைக்குச் சாத்தியமில்லாமல் தோன்றினாலும், ஆரோக்கியமான முதிர் வயதை எட்ட இது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
