நவராத்திரி தாம்பூலத்தில் எந்தெந்த பொருள் வைப்பதால் என்னென்ன பலன்கள், முழு தகவல்கள்!!

 
தாம்பூலம்

புரட்டாசி மாத அமாவாசையில் இருந்து தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் அம்பிகை கொலுவாக வீடுகளில் வீற்றிருப்பாள். கொலுவில் அம்பிகை பாடல்கள், துதிகள்  பாடலாம். கொலு வைக்கும் வீடுகளில் விதவிதமான பலகாரங்கள் அவரவர் குடும்ப வழக்கப்படி இடம்பெறும். அத்துடன் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்களை அழைத்து தாம்பூலம் வழங்குவர். இந்த தாம்பூலத்தில் தரப்படும் ஒவ்வொரு  பொருளுக்கும்   சிறப்பு பலன் உண்டு.  இந்துக்கள் பண்டிகையில் ஒவ்வொரு நடைமுறைக்கும் காரண காரியம் உண்டு.

தாம்பூலம்

தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கு மட்டுமல்ல. அத்துடன் தரப்படும் மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, தட்சிணை , இனிப்பு, வளையல் அனைத்திற்கும்  ஒரு காரணம் உண்டு. வீட்டிற்கு பெண்கள், பெண் குழந்தைகள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும் என்பது ஐதீகம். குறைந்த பட்சம் மஞ்சள் , குங்குமமாவது தர வேண்டும்.வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் . வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் சத்தியத்தின் சொரூபமாகவும் கொள்வர். இந்துக்களின் எல்லா பண்டிகை, பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு.  அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.அதுவும் நவராத்திரி நாட்களில், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம் வழங்குவது, அம்பிகைக்கே  வழங்குவதாக ஐதீகம். 

நவராத்திரியில் தாம்பூலத்தை கொடுக்கும் முறை: 

கன்னியா பெண்களை மனைப் பலகையில் உட்காரவைத்து, காலில் நலுங்கு இட்டு, சந்தனம் குங்குமம் பூசி  வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சிணை, புடவை /பாவாடை சட்டை அல்லது ரவிக்கைத்துணி இவைகளை  கொடுக்க வேண்டும்.மூத்த சுமங்கலிகளாக இருந்தால், நமஸ்காரம் செய்வது கூடுதல் சிறப்பு .

நவராத்திரி

நலுங்கு இடுதல்: ஆரோக்கியம் பெருகும். வெற்றிலை பாக்கு:  மகாலட்சுமி அருள் கிட்டும்  மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு:  தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம்.  சீப்பு: - கணவனின் ஆயுள்  பலம் கூடும்.  வளையல்: - மனஅமைதி கிட்டும்.  கண்ணாடி: கணவனின் ஆரோக்கியம் பெருகும். தேங்காய்:  பாவம் நீங்கும்.

பழம் - அன்னதானம் செய்த  பலன் கிட்டும், பூ:சுபநிகழ்வுகள் கைகூடும். மருதாணி: நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம். கண் மை:  திருஷ்டி தோஷங்கள் நீங்கும். தட்சிணை: - செல்வம் பெருகும்  ரவிக்கைத்துணி அல்லது புடவை: வியாதிகள் நீங்கும்.

இந்த பட்டியலில் அனைத்து பொருட்களையும் தர இயலாதவர்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தட்சிணையாவது வழங்க வேண்டும். நவராத்திரியில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கலாம்.   இதனை பெற அம்பிகையே யார் ரூபத்திலாவது நேரில் வருவாள்  என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை..