“சுங்கச்சாவடிகள் எதற்கு? மக்கள் பணத்தைச் சுரண்டுவதா?” - வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆவேசம்! 78 டோல்கேட்களை மூட வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் அவலங்கள் மற்றும் சுங்கக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 4,974 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால், லாரி உரிமையாளர்கள் முதல் சாமானிய கார் உரிமையாளர்கள் வரை அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விதிகளின்படி குறிப்பிட்ட தொலைவிற்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்க வேண்டும்; ஆனால் தமிழகத்தில் மிகக் குறுகிய தூரத்திலேயே அடுத்தடுத்த டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும் நிலையில், அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவறைகள் மற்றும் ஓய்வறைகள் முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்று கிடக்கின்றன.

சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் பல இடங்களில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன. இது விபத்துகளுக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது. பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உடனடியாகத் தலையிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும், சாலைப் பணிகளை விரைந்து முடித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
