"தங்கைக்கு அண்ணனாக இருப்பேன் என்ற வீரவசனம் என்னாச்சு?" - டிடிவி தினகரன்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் மக்கள் மத்தியில் அடங்கவே இல்லை. அதற்குள்ளாகவே மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சம்பவம், தமிழகத்தில் ஒட்டுமொத்தப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது" என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வின் போது, தவெக தலைவர் விஜய் எழுதியிருந்த உருக்கமான கடிதத்தை இந்தச் சூழலில் டிடிவி தினகரன் நினைவு கூர்ந்துள்ளார்.
"அன்று மாணவிக்கு நடந்த கொடுமையைக் கண்டு கொதித்தெழுந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தங்கைகளுக்கும் நான் ஒரு அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என வீரவசனம் பேசி கடிதம் எழுதினாரே திரு. ஜோசப் விஜய்... அந்த வார்த்தைகள் எல்லாம் இப்பொழுது என்ன ஆனது?
தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு மாநிலத்தில் அன்றாடம் அரங்கேறி வரும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் அவர் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசு சட்டம்-ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், "மரக்காணத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதாகியுள்ள குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் மிக விரைவாக உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது புதிய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில் செலுத்தும் கவனத்தை விட, மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தனது பதிவின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 15 நாட்களில் அடுத்தடுத்துப் பதிவாகி வரும் குற்றச்சம்பவங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிரான தங்களின் அரசியல் ரீதியான அழுத்தங்களை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.
