"அஞ்சு வருஷமா என்ன பண்ணீங்க? பேருந்துகளை நிறுத்தச் சொல்லுங்க.." - கனிமொழியை சுற்றிவளைத்து கொந்தளித்த பெண்கள்!

 
கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே நடைபெற்ற புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழியிடம், அப்பகுதி பெண்கள் பேருந்து நிறுத்த விவகாரம் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று தங்களது நீண்ட நாள் பிரசினை ஒன்றை முன்வைத்தனர்.

கனிமொழி

"இந்தப் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பலவும், எங்களது ஓடக்கரை நிறுத்தத்தில் சரிவர நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, அனைத்துப் பேருந்துகளும் இங்கே கட்டாயம் நின்று செல்ல உரிய உத்தரவிட வேண்டும்."

பொதுமக்களின் இந்தக் கோரிக்கையைக் கேட்ட கனிமொழி எம்பி, தற்போதைய அரசியல் சூழலைக் குறிப்பிட்டு, "தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருந்தால், நான் அவரிடம் பேசி இந்த நிமிஷமே பேருந்துகளை இங்கே நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்திருப்பேன். தற்பொழுது ஆட்சி எங்களிடம் இல்லை."

அனிதா ராதாகிருஷ்ணன்

கனிமொழி எம்பியின் இந்தப் பதிலை அங்கிருந்த பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அஞ்சு வருஷமா நீங்க தானே இருந்தீங்க? என்று குரல் எழுப்பினார்கள். இப்போ தவெக ஆட்சிக் காலத்திலும் உள்ளூர் பிரசினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்கள் கனிமொழியிடமே கொந்தளித்துக் கேள்வி எழுப்பினர்.

"மாநிலத்தில் ஆட்சி மாறினால் என்ன? இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ இன்னும் மாறவில்லையே, அதே திமுக எம்.எல்.ஏ தானே இப்போதும் இருக்கிறார்? தொகுதி மக்களின் பிரசினைகளைத் தீர்க்க வேண்டியது அவரது கடமை அல்லவா?" எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினர்.

பெண்களின் இந்தத் திடீர் எதிர்க் கேள்வியால் விழா மேடைப் பகுதியில் திடீரெனப் பெரும் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் போலீசார், பெண்களைச் சமாதானப்படுத்திப் பின்னுக்கு அனுப்பினர்.