“என்னது? ஜெயலலிதாவா?” - மேடையிலேயே லீமா ரோஸை வெளுத்து வாங்கிய தொண்டர்கள்; மகளிரணி கூட்டத்தில் சலசலப்பு!
சென்னையில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைக்காமல் "ஜெயலலிதா அம்மையார்" என்று குறிப்பிட்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மகளிரணி துணைத் தலைவருமான லீமா ரோஸுக்கு எதிராக, ரத்தத்தின் ரத்தங்களான மகளிரணி நிர்வாகிகள் மேடையின் கீழிருந்து கொதித்தெழுந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மழைக்காலக் கூட்டத்தொடர் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சிப் பெண் நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றினார்.
"கட்சியிலிருந்து தவெக உள்ளிட்ட மாற்று முகாம்களுக்குச் செல்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் தொடர்ந்து கட்சிப் பணியை உத்வேகத்துடன் பாருங்கள். நம்முடைய அதிமுகவில் தான் பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமையும், அதிக வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெண்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமும், அதிக இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன."

இபிஎஸ்-இன் உரைக்குப் பிறகு மேடையில் பேசத் தொடங்கிய லீமா ரோஸ் எம்.எல்.ஏ-வின் பேச்சை, அங்கிருந்த மகளிரணியினர் தொடக்கத்திலிருந்தே பெரிதாக மதிக்காமல் முணுமுணுத்துக் கொண்டே இருந்தனர். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென ”ஜெயலலிதா அம்மையார்” என்று வாய் தவறிப் பேசினார். இதைக் கேட்ட அடுத்த நொடி, அரங்கிலிருந்த நூற்றுக்கணக்கான மகளிரணி நிர்வாகிகள் ஆவேசமடைந்து, "என்னது ஜெயலலிதாவா? 'அம்மா' என்று கூப்பிடுங்கள்!" என மேடையை நோக்கி சத்தம் போட்டுத் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து அவருக்குப் பலத்த டோஸ் விட்டனர். இதனால் அரங்கமே அதிரும் வகையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
சூழ்நிலை கைமீறிச் செல்வதைக் கவனித்த அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி உடனடியாக எழுந்து வந்து மைக் பிடித்து, லீமா ரோஸ் பேசியதைச் சாதுரியமாகச் சமாளித்து மகளிரணியை அமைதிப்படுத்தினார். "கட்சியின் ரத்தத்தில் ஊறியவர்களுக்கு மட்டும் தான் புரட்சித்தலைவி அம்மாவை எப்போதும் 'அம்மா' என்றே அழைக்கத் தோன்றும். லீமா ரோஸ் நமது இயக்கத்திற்குப் புதிதாக வந்தவர் என்பதால், மேடையில் பேசும் போது வாய் தவறி அப்படிச் சொல்லிவிட்டார். மகளிரணி சகோதரிகள் அமைதி காக்க வேண்டும்."

முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியின் இந்த விளக்கத்திற்குப் பிறகே மகளிரணியினர் ஓரளவுக்கு அமைதியடைந்தனர். எனினும், லீமா ரோஸ் மீது மகளிரணி நிர்வாகிகள் நீண்ட நாட்களாகக் கடுமையான அதிருப்தியில் இருப்பது இச்சம்பவம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக லீமா ரோஸ் வாக்களித்திருந்ததை ஏற்கனவே அதிமுக ரத்தத்தின் ரத்தங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கட்சித் தலைமை அவர் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், இன்னும் அவரை மகளிரணி துணைத் தலைவராகவே நீடிக்க வைத்திருப்பதை விரும்பாமல் உட்கட்சிக்குள் மகளிரணியினர் தொடர்ந்து குமுறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
