தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகிறார் வைகோ - பின்னணி என்ன?! தனித்து விடப்பட்டதா திமுக?
டெல்லி அரசியலில் நாடாளுமன்ற அனுபவம் கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை வைகோ நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் இந்த உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாநில அமைச்சருக்கு இணையான தகுதியும், அதிகாரமும், அரசு சலுகைகளும் வழங்கப்படும். முதற்கட்டமாக இப்பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தற்போதைய தவெக கூட்டணி அரசு நீடிக்கும் வரை வைகோவின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
டெல்லியில் தங்கியிருந்து தமிழ்நாட்டின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பது, மாநிலத்திற்கான நிலுவை நிதி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய அமைச்சகங்களிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இதன் முதன்மையான பணியாகும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக எதிர்கொண்ட விசித்திரமான அரசியல் சூழலே இந்த டெல்லி நியமனத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட்டது. தேர்தலில் மதிமுக சார்பில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். தேர்தலுக்குப் பின் திமுக, அதிமுகவை ஓரம் கட்டி தவெக 108 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மைக்கு பற்றாக்குறை நிலவியதால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன.
இதற்கு நன்றிக்கடனாக விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்குத் தலா ஒரு அமைச்சர் பதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார். மதிமுகவும் தவெக அரசைத் தொடர்ந்து ஆதரித்துப் பாராட்டி வந்ததால், அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க அரசு விரும்பியது. ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள் திமுகவை விட்டு வெளியேற முடியாத சட்டச் சிக்கல் நீடித்தது.
மதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குச் சட்டமன்றத்திற்குள் அமைச்சர் பதவி வழங்க முடியாத சூழல் நிலவுவதால், அக்கட்சியின் மூத்த தலைவரான வைகோவுக்கு இந்த டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை வழங்க முதலமைச்சர் விஜய் வியூகம் வகுத்துள்ளார்.

டெல்லி வட்டாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் இணக்கமான நட்பைக் கொண்டுள்ள வைகோவின் இந்த நியமனம், தவெக அரசுக்கு மத்திய அரசுடன் இணக்கமான உறவை வளர்க்கப் பெருமளவில் உதவும் என்று அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை (ஜி.ஓ.) இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக என ஒவ்வொரு கட்சியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவியும் பெற்று விட்டன. இப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மதிமுகவையும் பிரித்திருப்பதால் திமுக தனித்து விடப்பட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
