நாளை நீட் மறுதேர்வு - என்னென்ன தேவை.. என்னென்ன கூடாது? முழு செக் லிஸ்ட்!
நாடு முழுவதும் நாளை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை மிக வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற முதன்மைத் தேர்வின் போது வழங்கப்பட்ட பழைய ஹால் டிக்கெட்டுகளைக் கொண்டு இந்த மறுதேர்வை எழுத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வு எழுதும் மாணவர்களின் கோரிக்கைகள் அடிப்படையில், பலருக்கு புதிய தேர்வு மையங்கள் மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, பழைய ஹால் டிக்கெட்டில் உள்ள தேர்வு மைய விவரங்கள் மாற வாய்ப்புள்ளதால், தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாகப் புதிய ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, அதையே தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டும் என NTA அறிவுறுத்தியுள்ளது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் ஒரு முக்கியத் தெளிவுபடுத்தலையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து புதிய மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கையில் வைத்திருப்பவர்கள், அதனை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இன்னும் புதிய ஹால் டிக்கெட்டை எடுக்காதவர்கள் உடனடியாக NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களின் விபரங்களைப் பதிவிட்டுப் புதிய ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பழைய ஹால் டிக்கெட்டுடன் வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) ஆஃப்லைன் முறையில் இத்தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் காலை 11:00 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மதியம் 1:30 மணிக்குக் கேட்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும். அதற்குப் பிறகு வரும் மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை.

தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் அதிநவீன மெட்டல் டிடெக்டர் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கைக்கடிகாரங்கள், மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் கோடை வெயில் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், விசிறி வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை உறுதி செய்ய என்.டி.ஏ. உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் வெளிப்படையான குடிநீர் பாட்டில்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
மறுதேர்வை ஒட்டி நாடு முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கண்காணிப்புக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளைத் தடுக்க நாடு முழுவதும் தற்காலிகமாகத் டெலிகிராம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தகவல் தொடர்புச் செயலிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
