ஈரான் உச்ச தலைவர் கமேனி இறுதிச்சடங்கு - 5 மாத தாமதத்திற்கான காரணம் என்ன? உடலைப் பாதுகாத்தது எப்படி?!

 
ஈரான் கமேனி

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அவரது மறைவு நிகழ்ந்து சுமார் 5 மாதங்கள் கடந்த நிலையில்,  இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இறுதிச்சடங்கு தாமதமானதற்கான முக்கிய காரணங்கள்

தீவிரமடைந்த போர்ச் சூழல்:

கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மிகத் தீவிரமாக வெடித்தது. நாட்டின் பாதுகாப்புச் சூழல் மிக மோசமாக இருந்ததாலும், தொடர் தாக்குதல்கள் நடந்ததாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இத்தகைய பிரம்மாண்டமான பொது நிகழ்வை உடனடியாக நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்: வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரானின் முக்கியத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஒரே இடத்தில் கூடுவதில் கடுமையான பாதுகாப்புச் சிக்கல்கள் நீடித்தன.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி

தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம்: போரின் தீவிரம் காரணமாக மார்ச் மாத தொடக்கத்தில் நடக்கவிருந்த இறுதிச்சடங்கு தள்ளிவைக்கப்பட்டது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சுமுகமான சூழல் காரணமாகவே, பொது இறுதிச்சடங்கை நடத்த ஈரான் அரசுக்குத் துணிச்சல் கிடைத்துள்ளது.

உடலை ஐந்து மாதங்கள் பாதுகாத்தது எப்படி?

கடந்த 5 மாதங்களாக கமேனியின் உடல் அதிநவீன குளிர்சாதன வசதிகள் கொண்ட தற்காலிகப் பாதுகாப்பு மையத்தில் எவ்விதச் சிதைவும் இன்றிப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

அயதுல்லா அலி கமேனி

கமேனியின் உடல் பொதுமக்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்களின் அஞ்சலிக்காகத் தெஹ்ரானில் உள்ள பிரம்மாண்டமான கிராண்ட் மொசல்லா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தெஹ்ரான், கோம், மஷ்ஹத் உள்ளிட்ட ஈரானின் 5 முக்கிய நகரங்கள் மற்றும் ஈராக்கில் உள்ள ஷியாக்களின் புனித நகரங்களான நஜாப், கர்பலா ஆகிய இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, ஜூலை 9 அன்று கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா மத வளாகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.