இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு 19% குறைந்தது - என்ன காரணம்? - முக்கிய விபரம் வெளியீடு!
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 19 சதவீதம் வரை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் சமையல் சிலிண்டர்களின் நுகர்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2025-ம் ஆண்டு மே மாதத்தில் சமையல் கேஸ் பயன்பாடு 26.2 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நடப்பாண்டு மே மாதத்தில் சிலிண்டர் பயன்பாடு 19.2 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

சிலிண்டர் பயன்பாடு இந்த அளவுக்குக் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து டெல்லி மின்சாரத் துறைத் தலைவர் அபிஷேக் நாத் விளக்குகையில், சிலிண்டர் பயன்பாடு திடீரெனக் குறைந்ததற்கு நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட சிலிண்டர் விநியோகத் தடைகளே மிக முக்கியக் காரணமாகும்.

சமையல் கேஸ் பயன்பாட்டு முறையில் பெரிய அளவிலான தரைமட்ட கட்டமைப்பு மாற்றங்கள் எதுவும் தற்போதைக்கு ஏற்படவில்லை என்றாலும், நகர்ப்புறங்களில் பல குடும்பங்கள் தற்போது மின்சார அடுப்புகளின் பயன்பாட்டிற்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
விலை உயர்வு மற்றும் விநியோகத் தாமதம் காரணமாகப் பொதுமக்கள் மாற்று வழிமுறைகளைத் தேடத் தொடங்கியுள்ளதே இந்த 19 சதவீதப் பயன்பாட்டுக் குறைவிற்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
