என்னாகுமோ? ஏதாகுமோ? இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தவெக அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கக் கோரி அதிமுக தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை மீறி வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே, அந்த 25 பேரில் 4 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். மீதமுள்ள 21 பேர் மன்னிப்புக்கோரி கடிதம் அளித்ததை ஏற்று, அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளைச் சபாநாயகர் கைவிட்டார்.
சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் பி.வி.செல்வக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவானது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.
