அடுத்த மூவ் என்ன?... புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்... இபிஎஸ் அவசர ஆலோசனை!

 
எடப்பாடி எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக தனது எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் எஸ்பி வேலுமணி, சி. விஜயபாஸ்கர், கேபி முனுசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

எடப்பாடி

தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்ற கட்சிகளால் இழுக்கப்படுவதைத் தடுக்கவும், கட்சியின் அடுத்தகட்ட வியூகங்களை வகுக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பாதுகாப்பாகப் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் நிலையில், அதிமுக-வின் 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

எடப்பாடி

சென்னையில் ஆலோசனையை முடித்த எடப்பாடி பழனிசாமி, இன்னும் சற்று நேரத்தில் புதுச்சேரிக்கு விரைகிறார். அங்கே தங்கியுள்ள தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதில் அதிமுக யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது நடுநிலை வகிப்பதா என்பது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் 'ரிசார்ட் அரசியல்' மீண்டும் தலைதூக்கியிருப்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.