வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய 'கிரீன் டாட்' வசதி!

 
வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் செயலி, தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் செயலிகளில் இருப்பதை போன்ற புதிய 'கிரீன் டாட்' ஆன்லைன் இண்டிகேட்டர் அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது.

தற்போது வாட்ஸ்அப்பில் ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்பதை அறிய, அவரது சாட் விண்டோவை திறந்து, பெயருக்குக் கீழே 'Online' என்று வருகிறதா எனப் பார்க்க வேண்டும். ஆனால், புதிய அப்டேட் இந்த நடைமுறையை எளிமையாக்குகிறது. ஒரு பயனர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, அவரது ப்ரொஃபைல் படத்தின் கீழ் வலது ஓரத்தில் ஒரு சிறிய பச்சை நிறப் புள்ளி தோன்றும்.

வாட்ஸ் அப்

அவர்கள் செயலியை விட்டு வெளியேறியவுடன் அந்தப் பச்சை நிறப் புள்ளி தானாகவே மறைந்துவிடும். இதன் மூலம் யார் யாரெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்கிறார்கள் என்பதை ஒரே பார்வையில் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி தற்போது முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS Beta - version 26.26.10.72) பீட்டா பயனர்களுக்கு மட்டுமே சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது.

சாட் இன்ஃபோ ஸ்கிரீன்: தற்போதைய சோதனையின்படி, இந்த கிரீன் டாட் வசதியானது முக்கிய சாட் லிஸ்ட்டில் நேரடியாகத் தெரியாது. ஒரு நபரின் பெயரைத் தட்டி, அவரது 'Chat Info' அல்லது ப்ரொஃபைல் பக்கத்திற்குள் செல்லும் போது மட்டுமே இந்த பச்சை நிறப் புள்ளி தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்

இந்த புதிய வசதியால் பயனர்களின் பிரைவசி பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருக்கும் 'Last Seen & Online' பிரைவசி அமைப்புகளின் படியே இதுவும் செயல்படும். ஒரு பயனர் தனது ஆன்லைன் ஸ்டேட்டஸை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி 'Nobody' என்று மறைத்து வைத்திருந்தால், அவர் ஆன்லைனில் இருந்தாலும் இந்த 'கிரீன் டாட்' மற்றவர்களுக்குக் காட்டப்படாது. அதேபோல், தன் ஸ்டேட்டஸை மறைப்பவர்களால் மற்றவர்களின் கிரீன் டாட்டையும் பார்க்க முடியாது.

பீட்டா சோதனைகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, வரும் வாரங்களில் இந்த புதிய அப்டேட் உலகெங்கிலும் உள்ள அனைத்து பொதுப் பயனர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.